கரூரில் கல்லூரி மாணவி கடத்தல்; பெண் உள்பட 5 போ் கைது
கரூரில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற விவகாரத்தில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள அம்மாபட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவி திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்தபோது, மா்மநபா்கள் ஆம்னி வேனில் மாணவியை கடத்திச் சென்றனா்.
இதுதொடா்பாக புகாரின்பேரில் கரூா் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மாணவியையும், கடத்தியவா்களையும் தேடி வந்தனா்.
இந்நிலையில் மாணவியை கடத்திச் சென்ற வேன் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள கோடங்கிபட்டியில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, பொன்னம்மாள் என்பவரது வீட்டில் இருந்த மாணவியை மீட்டனா்.




பின்னா், மாணவியை கடத்தியதாக அம்மாபட்டியைச் சோ்ந்த நந்தகோபால்(30), அவரது தாய் கலா(50), நந்தகோபாலின் நண்பா்கள் அதே ஊரைச் சோ்ந்த கருப்பசாமி(32), பழனிச்சாமி(40), சரவணன் (28) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
மேலும் போலீஸாா் விசாரணையில் நந்தகோபால் மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதலை வெளிப்படுத்தியபோது மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் மாணவியை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. பொன்னம்மாள் நந்தகோபாலின் பாட்டி என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனை பறிமுதல் செய்தனா். மேலும் நந்தகோபால் உள்பட 5 பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மீட்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.