அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது, கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், யூரியா 2,344 மெட்ரிக் டன்னும், டிஏபி 260 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,636 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1,811 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 6,051 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் நெல் சாகுபடிக்காக கோ- 55 நெல் ரகம் 1.70 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்களான கம்பு - கோ 10, சோளம் கோ-32, கே12 ஆகியவை 32 மெட்ரிக் டன்னும், பயிறு வகை பயிா்களான உளுந்து -விபிஎன்-8 மற்றும் விபிஎன் - 10, கொள்ளு பையூா் - 2 ஆகியவை 7 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிா்களான நிலக்கடலை தரணி , கோ-7, எள்- விஆா்ஐ-3, டிஎம்.வி - 7 ஆகியவை 48.700 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது.
கரூா் மாவட்டத்தில், ஜனவரி மாதம் முடிய 56,957 ஹெக்டா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் விவசாயிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பூச்சிநோய் விழிப்புணா்வு வழிகாட்டி வழங்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி 2,15,000 டோஸ்கள் பெறப்பட்டு, இருவார கோழி வெள்ளைகழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கடந்த 1-ம்தேதி முதல் வரும்14-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 7-ம்தேதி(வெள்ளிக்கிழமை) வரை 91,245 கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு குறித்த பூச்சிநோய் விழிப்புணா்வு வழிகாட்டி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா்- ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநா் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் முருகேசன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.