கர்நாடகத்தில் இரு மாதங்களாக குகைக்குள் வாழ்க்கை! குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷிய பெண்மணியை தாயகம் அனுப்ப உத்தரவு
கணவரைப் பிரிந்து இரு பெண் குழந்தைகளுடன் இந்தியாவில் வாழும் ரஷியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர், கர்நாடகத்திலுள்ளதொரு குகையில் 2 மாதங்களாக தமது குழந்தைகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை விரைந்து தாயகத்துக்கு அனுப்பிவைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த ட்ரார் ஷ்லோமோ கோல்ட்ஸ்டெய்ன் என்பவரும் ரஷியாவைச் சேர்ந்த நினா கட்டீனா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு மொத்தம் இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவனும் மனைவியும் பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழ்க்கை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஜூலை 11-இல் நினா கட்டீனாவையும் அவரது இரு மகள்களையும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான ராமதீர்த்த மலையிலுள்ளதொரு குகையிலிருந்து அதிகாரிகள் மீட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சுமார் 2 மாதங்களாக அந்தக் குகையில் அவர்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடன் உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் புலனானது.
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் அந்தப் பெண்மணியின் கணவர் கோல்ட்ஸ்டெய்ன் கோவாவிலுள்ள பனாஜி காவல் நிலையத்தில் தமது குழந்தைகளை காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதியப்பட்டு போலீஸார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், கோல்ட்ஸ்டெய்னின் குழந்தைகள் கர்நாடகத்தில் மீட்கப்பட்டிருக்கும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, தமது கடைசிக் குழந்தையின் பிறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அந்தக் குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்ய கோல்ட்ஸ்டெய்ன் வலியுறுத்தியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், மீட்கப்பட்ட ரஷிய பெண்மணியையும் குழந்தைகளையும் அவர்களது தாயகமான ரஷியாவுக்கே அனுப்பிவைக்க தூதரகம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டதில், அவர்கள் ரஷியாவுக்கு திரும்ப ரஷிய அரசால் அக். 9 வரை கால அவகாசமும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்களை ரஷியாவுக்கு அனுப்ப தடை விதிக்குமாறு கோல்ட்ஸ்டெய்ன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(செப். 26) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், பாதிக்கப்பட்டுள்ள பெண்மணி தமது சொந்த நாட்டுக்குத் திரும்ப சம்மதித்திருப்பதும், குழந்தையின் மரபணு பரிசோதனை முடிவுகள் வெளியாகிவிட்டதும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி. எம். ஷியாம் பிரசாத், அந்தப் பெண்மணியும் அவரது இரு மகள்களும் ரஷியா செல்ல தேவையான பயண ஆவணங்களை வழங்கி தாயகம் அனுப்பிவைக்க உத்தரவிட்டது.