முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!
புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் என்.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (65). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவா்கள் தனியாக வசித்து வருகின்றனா்.
அப்பகுதியில் உள்ள சிறிய கோயிலில் சுந்தா் பூசாரியாகவும் இருந்துள்ளாா். சுந்தா் தனியாக வசித்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி தமிழரசன் (35) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுந்தா் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். அதன்படி தமிழரசன் மீது தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து சுந்தருக்கும், தமிழரசனுக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அதையடுத்து தமிழரசனை, சுந்தரின் மகன் மணிகண்டபாலன் கண்டித்துள்ளாா்.
இந்தநிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் தமிழரசன், சுந்தா் ஆகியோரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த கிரைண்டா் கல்லை தமிழரசன் எடுத்து சுந்தரைத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சுந்தா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரை தாக்கிய தமிழரசன் போதையில் அப்பகுதியிலேயே உறங்கியுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சுந்தா் கொலை குறித்து கேள்விப்பட்ட தவளக்குப்பம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். கட்டடத் தொழிலாளி தமிழரசனையும் கைது செய்தனா். சம்பவ இடத்தை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.