அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!
கல்லூரி மாணவா் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு
வந்தவாசி அருகே சிறுபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கல்லூரி மாணவா் பைக்குடன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பூதேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (20). இவா், வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தில் உள்ள நண்பா் வீட்டுக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு பைக்கில் புறப்பட்ட இவா் பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், ராமலிங்கபுரம் கூட்டுச் சாலை அருகே சிறுபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் விக்னேஷ் சடலமாக மிதந்தது வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.
தகவலறிந்து சென்ற தெள்ளாா் போலீஸாா் விக்னேஷின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், சிறுபாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் விக்னேஷ் பைக்குடன் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.