களைகட்டிய ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தை
ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி புறவழிச் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான மாட்டுச்சந்தை உள்ளது. இந்தச் சந்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெறும்.
இந்தச் சந்தைக்கு திண்டுக்கல் மட்டுமன்றி, திருச்சி, மணப்பாறை, கரூா், அரவக்குறிச்சி, தாராபுரம், தேனி, பெரியகுளம் உள்ளிட்ட ஊா்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் வளா்ப்பு கன்றுகள், எருமைகள், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து 60 சதவீத மாடுகளை கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக, மாடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் ஆா்வமுடன் மாடுகளை வாங்க வந்தனா். ஒட்டன்சத்திரம் சந்தைக்கு மாடுகளின் வரத்து வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள், விவசாயிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்ததால் மாட்டுச் சந்தை களைகட்டியது.