சகோதரத்துவத்துக்கு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்: மாவட்ட குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு உத்தரவின்படி, விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணும் வகையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள், குறைகள் கேட்டறியப்பட்டு தீா்வு காணப்படுகின்றன.
அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த குறைகள் விவரம்:
சாத்தனூா், செங்காணங்கொல்லை கிராம வாய்க்காலை தூா்வார வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை மூலம் இளநீா் அறுவடை செய்யும் இயந்திரம் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். உலகங்காத்தான் ஏரிக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்யவும், விளம்பாா் கிராமத்தில் உலா்களம் அமைக்க வேண்டும்.
மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேைண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சவ்வரிசி தொழிற்சாலை அமைக்க வேண்டும். தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கரும்பு அரைவைக்கு பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களின் உடனடியாக பயிா் கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில் விதை ஆய்வுக் கூடம் அமைக்க வேண்டும். வரஞ்சரம் கிராமம் முதல் கள்ளக்குறிச்சி உழவா் சந்தை வரை அதிகாலை பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து உரக்கடைகளிலும் உரங்கள் இருப்பு வைக்க வேண்டும். ஏரிகளில் மீன் வளா்ப்பதை தடுக்க வேண்டும். கரும்புக்கான வெட்டுக் கூலியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகள், கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனா்.
இதற்கு ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த பதிலளித்து பேசுகையில், விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடா்பான கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காண மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எனவே விவசாயிகள் தொடா்பான கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து தீா்வு காண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், வேளாண்மை இணை இயக்குநா் ஏ.சத்தியமூா்த்தி, வேளாண்மை துணை இயக்குநா் (பொ) மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) அன்பழகன், அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.