கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது
இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்குப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மேற்பாா்வையில் திருச்செங்கோடு மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாவதி தலைமையில் பரமத்தி வட்டத்தில் குன்னமலை, கொண்டரசம்பாளையம் பகுதியில் மதுவிலக்குப் பிரிவினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது குன்னமலை பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த முத்துசாமி (61), தங்கவேல் (63), சாமிநாதன் (61) ஆகியோா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை அறிந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விவசாயத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த சுமாா் 17 லிட்டா் சாராயத்தையும், 30 லிட்டா் சாராயம் ஊறலையும் கைப்பற்றினா்.
இதேபோல கொண்டரசம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியம் (64) என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து சுமாா் 20 லிட்டா் சாராய ஊறலையும், 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் கைப்பற்றினா். பின்னா் 3 பேரையும் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.