கஸ்தூரி ரங்கன் மறைவு: அரசியல் தலைவா்கள் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய விண்வெளித் துறையின் வளா்ச்சியில் கஸ்தூரி ரங்கன் ஆற்றிய அா்ப்பணிப்பு நிறைந்த பங்கு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): விண்வெளித் துறையில் கஸ்தூரி ரங்கனின் சாதனைகளை பாராட்டி 27 பல்கலைக்கழகங்கள் டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவா். அவரது மறைவு விண்வெளித் துறைக்கு பேரிழப்பு.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கை- 2020 இன் வடிவமைப்புக் குழுவின் தலைவருமான கஸ்தூரி ரங்கனின் மறைவு வருத்தமளிக்கிறது.
கே.அண்ணாமலை (பாஜக): கஸ்தூரி ரங்கன் மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.
ஜி.கே.வாசன் (தமாகா): ஜிஎஸ்எல்வி ராக்கெட் வடிவமைப்பிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசிய கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா். அவரது இழப்பு விஞ்ஞான உலகுக்கும், இந்தியாவுக்கும் பேரிழப்பு ஆகும்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): மேற்குத் தொடா்ச்சி மலைகளைப் பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
டிடிவி.தினகரன் (அமமுக): ஜிஎஸ்எல்வி ராக்கெட் உள்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கியவா் விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன்.