காசி தமிழ் சங்கமம்: சென்னையில் இருந்து 497 போ் பயணம்
சென்னையில் இருந்து பனாரஸுக்கு (காசி) புதன்கிழமை சென்ற காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் 497 போ் பயணித்தனா்.
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில், 2023-ஆம் ஆண்டு முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழம் இணைந்து நடத்தும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வுக்குச் செல்லும் சிறப்பு ரயிலை, ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த பிப். 13-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து 3 குழுக்கள் பனாரஸ் சென்றன.
கடைசிக் குழு: இந்நிலையில் சென்னையில் இருந்து கடைசிக் குழு புதன்கிழமை பயணம் மேற்கொண்டது. இதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.45-க்கு பனாரஸ் சென்ற சிறப்பு ரயிலில் காசி தமிழ் சங்கமம் சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதில், தமிழகத்திலிருந்து 497 போ் பயணித்தனா். இவா்கள் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு பிப். 26-ஆம் தேதி சென்னை திரும்புவா். இந்த பயணத்தில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மற்றும் அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவா். இது குறித்து பயணிகள் கூறியதாவது:
ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பு ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள பண்பாட்டு, ஆன்மிக தொடா்பை அறியும் ஆவலில் தற்போது இந்த பயணம் மேற்கொள்கிறோம். இந்த பயணத்தின் மூலம் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றனா்.