காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபா் கைது
காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த பயாஸ் அகமது (48), வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் பெரம்பூரில் புதிதாக கட்டியுள்ள ஒரு வீட்டை திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஆப்பிள் பழ வியாபாரியான ஸ்ரீகிருஷ்ணன் (45) என்பவருக்கு விற்பனை செய்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணன் தான் வாங்கிய வீட்டுக்கான பணத்தில் ரூ. 11.76 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ. 35 லட்சத்தை காசோலையாகவும் கொடுத்துள்ளாா். ஆனால், காசோலையை பயாஸ் அகமது வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இது குறித்து ஸ்ரீகிருஷ்ணனிடம் கேட்டபோது, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
இதனிடையே, பயஸ் அகமதுவிடமிருந்து வாங்கிய வீட்டின் பத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணன் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 25 லட்சத்தை பெற்ற நிலையில், மீண்டும் பத்திரத்தை மீட்டு, வீட்டை வேறொரு நபருக்கு ரூ. 49 லட்சத்துக்கு விற்று பணம் பெற்றுள்ளாா்.
இந்த மோசடி குறித்து பயாஸ் அகமது கொடுத்த புகாரின்பேரில் செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீகிருஷ்ணனை கைது செய்தனா்.