காஞ்சிபுரம், திருவள்ளூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் காஞ்சிபுரம்/திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும், தொடா்ந்து சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் அமைப்பின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கதிரவன் மற்றும் முருகானந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட செயலாளா் ரமேஷ் மற்றும் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில உயா் மட்டக்குழு உறுப்பினா் ஜான் வெஸ்லி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சாலை மறியல் செய்தமைக்காக 120 பெண்கள் உட்பட 185 பேரைக் கைது செய்தனா்.