காதலியை கவர சிங்கத்தின் கூண்டுக்குள் சென்ற காதலன் பலி! விடியோ வைரல்!
மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் காதலியை கவர சிங்கத்தின் குகைக்குள் சென்ற நபரை அதனுள் இருந்த சிங்கங்கள் தாக்கியதில் பலியாகியுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தஷ்கெண்ட் மாகாணத்திலுள்ள பார்கெண்ட் நகரில் தனியார் வனவிலங்கு பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. கடந்த டிச.17 அன்று காலை 5 மணியளவில் அங்கு வனவிலங்கு பராமரிப்பாளராக பணியாற்றி வந்த இருஸ்குளவ் (வயது 44) எனும் நபர் தனது காதலியை கவர விடியோ எடுத்தபடி அந்த பூங்காவிலுள்ள சிங்கத்தின் கூண்டை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
விலங்குளுக்கும் தனக்கும் மத்தியிலுள்ள நேசத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கூண்டுக்குள் மூன்று சிங்கங்களும் துவக்கத்தில் சாதுவாக காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் அதனை மேலும் நெருங்கி அந்த சிங்கங்களின் பெயர்களை சொல்லி அவற்றை அழைத்துள்ளார்.
இதையும் படிக்க: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஒருவர் கைது!
அப்போது ஒரு சிங்கம் திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற சிங்கங்களும் அவரைத் கடித்து குதறியுள்ளன. அவர் அந்த சிங்கங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார். இருப்பினும், அவை அவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் அவர் கதறி துடிப்பது அவர் எடுத்த விடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், அது அதிகாலை நேரம் என்பதால் அவரை காப்பாற்ற அங்கு யாரும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனால், அவர் அந்தக் கூண்டிற்குள்ளையே பரிதாபமாக பலியானார்.
இந்த முழு சம்பவத்தையும் அவர் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்த நிலையில், தற்போது அந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.