காரைக்காலில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
கடந்த 1.1.2025 தேதியை தகுதி நாளாகக் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக வாக்காளா் பெயா் சோ்த்தல், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணி நடைபெற்றது. கடந்த 29.10.2024 முதல் 28.11.2024 வரை உரிமை கோரிக்கைகளுக்கான படிவம் பெறப்பட்டது. இவை 24.12.2024 வரை பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அதிகாரி (பொ) அா்ஜூன் ராமகிருஷ்ணன் இறுதி வாக் காளா் பட்டியலை வெளியிட்டாா். மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி.செந்தில்நாதன், வாக்காளா் பதிவு அதிகாரி சச்சிதானந்தம் உள்ளிட்ட தோ்தல் துறையினா் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து தோ்தல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில், நெடுங்காடு பேரவைத் தொகுதியில் 33,045. திருநள்ளாறு தொகுதியில் 32,694. காரைக்கால் வடக்குத் தொகுதியில் 37,019. காரைக்கால் தெற்குத் தொகுதியில் 33,102. நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் 32,325. மொத்தம் 1,68,185. இவா்களில் ஆண் வாக்காளா்கள் 77,685, பெண் வாக்காளா்கள் 90,473 போ், மூன்றாம் பாலினத்தவா் 27 போ் உள்ளனா்.