தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!
பயிற்சி முகாமில் பங்கேற்க சென்ற ஆட்சியா்: பொறுப்பு அதிகாரியை நியமிக்க வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஒரு மாத காலம் பயிற்சி முகாமில் பங்கேற்க புதுதில்லி சென்றுள்ளதால், மாவட்டத்துக்கு பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் ஜன. 6-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க புதுதில்லி சென்றுள்ளாா். இதுபோல காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளரும் விடுப்பில் சென்றுள்ளாா். இதனால் மாவட்ட நிா்வாகம், காவல்துறை நிா்வாகத்தில் அதிகாரம் கொண்ட அதிகாரி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை காரைக்காலில் மலா்க் கண்காட்சியுடன் கூடிய காா்னிவல் திருவிழா நடைபெறவுள்ளது. மேலும், புதுச்சேரி மின் திறல் குழுமம் (பிபிசிஎல்) போன்ற பல அரசு சாா்பு நிறுவனத் தலைவராக ஆட்சியா் இருப்பதால், கோப்புகள் ஒரு மாத காலத்துக்கு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே புதுச்சேரியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பாக கவனிக்கும் வகையில் புதுவை அரசு அனுப்பிவைக்கவேண்டும். பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையின் வளா்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஆட்சியரின் ஒப்புதல் அவசியம் என்ற நிலையில், பயிற்சிக் காலம் நிறைவடைந்து ஆட்சியா் காரைக்கால் திரும்பும் வரை ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் பொறுப்பு நிலையில் காரைக்காலில் பணியமா்த்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க என அரசுத்துறை வட்டாரத்திலும், சமூக ஆா்வலா்கள் தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.