விற்பனைக்கு தயாா் நிலையில் பொங்கல் பானைகள்
காரைக்கால்: பொங்கலையொட்டி காரைக்காலில் மண் பானை, சட்டி விற்பனைக்கு அனுப்புவதற்காக தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
கிராமப்புறம் மற்றும் நகரத்தையொட்டிய பகுதிகளில் பலரும் மண் பானையை இன்றும் பொங்கலுக்கு பயன்படுத்தும் நடைமுறையை கடைப்பிடிக்கின்றனா். பருவமழை ஓய்ந்தாலும், அவ்வப்போது பெய்த மழையால் மண் பாண்டங்கள் தயாரிப்புப் பணிகளில் மந்த நிலை காணப்பட்டது.
தைப் பொங்கல் விழாவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் கோட்டுச்சேரி, மேலஓடுதுறை உள்ளிட்ட கிராமங்களில், மண் பானை, சட்டி, அடுப்பு தயாரிக்கும் தொழில் செய்வோா் பணிகளை ஏறக்குறைய முடித்துவிட்டனா்.
பானை, சட்டிகள் விற்பனைக்கு தயாா்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கின்றனா்.
காரைக்காலில் தயாரிக்கப்படும் பானை, சட்டிகள் காரைக்கால் மாவட்டம் மற்றும் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. ஒரு படி முதல் 3 படி முதல் அரிசியிடும் அளவிலான பானைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. ரூ.100 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த 2, 3 நாள்களில் அவை விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும் என தயாரிப்புப் பணியில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.
பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள், பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன் அறுவடை செய்யும் வகையில் கரும்புகள் தயாா் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனா்.