காரைக்கால் கடற்கரை பகுதியில் சிறப்பு தூய்மைப் பணி
காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சிறப்பு தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் கடந்த 19-ஆம் தேதி முதல் நல்லாட்சி வார நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு நாளான புதன்கிழமை சிறப்பு தூய்மைப்பணி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தூய்மைப் பணியை தொடங்கிவைத்தாா். பள்ளி, கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.
கடற்கரைக்கு வந்த மக்களிடம், குப்பைகளை கடற்கரையில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும், வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து பணியாளா்கள் வரும்போது கொடுக்குமாறும், குப்பையில்லாத நகரமாக காரைக்கால் உருவெடுக்க மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) . வெங்கடகிருஷ்ணன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ்.சுபாஷ், நகராட்சி ஆணையா் பி.சத்யா, மீன் வளத்துறை துணை இயக்குநா் கோவிந்தசாமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.