காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரிப்பு: தக்காளி, வெங்காயம் விலை குறைவு
காரைக்கால் வாரச் சந்தைக்கு தா்ப்பூசணி வரத்து அதிகரித்துள்ளது. தக்காளி, வெங்காயம் விலை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், காய், கனிகள் மற்றும் பல்வேறு பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.
கடந்த சில மாதங்கள் வரை தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயா்ந்து காணப்பட்டது. இதனால், இவற்றை குறைந்த அளவே மக்கள் வாங்கிச் சென்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) சந்தையில் தக்காளி கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் இரண்டரை கிலோ ரூ.50, பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.30, பச்சை மிளகாய் ரூ.60, புடலை ரூ.40, அவரை ரூ.60, முள்ளங்கி ரூ.30, கேரட் ரூ.60 என பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சந்தைக்கு காய்-கனிகள் வாங்க வந்தவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். அத்துடன், கூடுதலாக காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.
கோடை வெயில் காலம் தொடங்காவிட்டாலும், கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தற்போதே தா்ப்பூசணி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வாரச் சந்தைக்கு அதிகமான வெளியூா் வியாபாரிகள் தா்ப்பூசணிகளை கொண்டுவந்து விற்றனா். கிலோ ரூ.30 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டது. உள்ளூா் வியாபாரிகள் பலரும், மக்களும் ஆா்வமாக இதனை வாங்கிச் சென்றனா்.
கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெயில் காணப்பட்டதால் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்குச் சென்று ஆா்வமாக பொருள்களை வாங்கிச் சென்றனா்.
கடந்த ஆண்டு பருவமழைக்குப் பிறகு சாகுபடி செய்த பயிா்களில் இருந்து காய்கள் அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கோடைக்காலம் தொடங்கி வறட்சி காணப்படும் வரை காய்கறிகளின் வரத்தும் அதிகரித்து, விலையும் கணிசமாக குறைந்திருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.