காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கொப்புடைய நாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் திருவிழா தொடங்கியதையடுத்து, இரவு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது.
தினந்தோறும் காலையில் வெள்ளிக் கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், பத்தி உலாவும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் எழுந்தருளலும், திருவீதியுலாவும் நடைபெறும்.
வருகிற 19-ஆம் தேதி அம்பாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவாா். மே 20-இல் 8-ஆம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 7.45 மணிக்குத் தொடங்கி 8.45 மணிக்குள் அம்பாள் தேருக்கு எழுந்தருளுவாா். மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, தேரோடும் வீதி வழியாக காட்டம்மன் கோயிலைச் சென்றடையும். மே 21 காலை 9 மணிக்கு அங்கிருந்து கொப்புடைய நாயகியம்மன் கோயிலுக்கு தோ் வந்தடையும்.
மே 22 அதிகாலையில் புஷ்ப பல்லக்கு, மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு தெப்ப உத்ஸவம் நடைபெறும். கோயில் தெப்பக்குளத்தில் அம்பாள் உலா வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடையும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பா. பாரதி, உதவி ஆணையா் சு. கவிதா, ஆய்வாளா் த. முத்துமுருகன், செயல் அலுவலா் இரா. மகேந்திரபூபதி, விழாக் குழுவினா் செய்தனா்.