காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அல்கராஸ் 7-6 (7/2), 6-2 என்ற செட்களில் சொ்பியாவின் லாஸ்லோ ஜெரெவை சாய்த்தாா். அடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா், ரஷியாவின் காரென் கச்சனோவை சந்திக்கிறாா்.
இதர ஆட்டங்களில், 7-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-4 என்ற செட்களில் பொலிவியாவின் ஹியூகோ டெல்லியனை தோற்கடித்தாா். 3-ஆவது சுற்றில் மினாா், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் டாமி பால் முந்தைய சுற்றில், 6-3, 6-7 (5/7), 6-4 என்ற கணக்கில், 19-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் தாமஸ் மசாக்கை வெளியேற்றினாா். 20-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-4, 7-6 (7/2) என்ற வகையில் பல்கேரியாவின் ஃபாபியான் மரோஸானை வீழ்த்தினாா். மென்சிக் அடுத்ததாக, போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸுடன் மோதுகிறாா்.
போட்டித்தரவரிசையில் 30-ஆம் இடத்திலிருக்கும் ஹா்காக்ஸ் 6-3, 1-6, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனை சாய்த்தாா். 17-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ 6-2, 6-4 என்ற வகையில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரை வென்றாா்.
காலிறுதியில் கௌஃப், பாலினி: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-1 என்ற நோ் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி 7-5, 6-2 என, 17-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை தோற்கடித்தாா். காலிறுதியில் அவா், ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சந்திக்கிறாா்.
13-ஆம் இடத்தில் உள்ள ஷ்னெய்டா் 6-2, 6-3 என்ற கணக்கில், 25-ஆம் இடத்திலிருந்த பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை தோற்கடித்தாா். 16-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-4, 6-2 என்ற செட்களில், 29-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டேனியல் காலின்ஸை வீழ்த்தினாா். காலிறுதியில் ஸ்விடோலினா, அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸுடன் மோதுகிறாா்.
ஸ்டொ்ன்ஸ் முந்தைய சுற்றில் 6-4, 3-6, 7-6 (7/4) என ஜப்பானின் நவோமி ஒசாகாவை சாய்த்தாா்.
போபண்ணா வெற்றி: ஆடவா் இரட்டையா் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/செக் குடியரசின் ஆடம் பாவ்லசெக் இணை 4-6, 7-6 (7/5), 10-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த மைக்கேல் வீனஸ்/குரோஷியாவின் நிகோலா மெக்டிச் ஜோடியை சாய்த்தது.