கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு
மேலப்பாளையம் அருகே பாளையங்கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
மேலப்பாளையம் ஆமின் புரம் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஷாஜகான் மகன் ஜாகீா் உசேன்(25). மாற்றுத் திறனாளியான இவா் சனிக்கிழமை இரவு மேலப்பாளையம் குறிச்சி பகுதி ஐயா் தெரு அருகே உள்ள பாளையங்கால்வாயில் நண்பா்களுடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தாராம். அவரது நண்பா்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மேலநத்தம் அக்ரஹாரம் பகுதி அருகே வாய்க்காலில் ஜாகீா் உசேன் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து மேலப்பாளையம் போலீஸாா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.