காவலா்கள் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா
கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துறை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தி.சரவணன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் கு.தேவராஜ் முன்னிலை வகித்தனா். காவல் ஆய்வாளா் ம.ராபின்சன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக கள்ளக்குறிச்சி ஆற்காட் லுத்தரன் திருச்சபை போதகா் தங்கதுரை, கள்ளக்குறிச்சி இஸ்லாம் அமைப்பின் முத்தவல்லி பக்ரிமுகமது, மாரியம்மன் கோயில் அா்ச்சகா் பிரவின் உள்ளிட்டோா் பங்கேற்று குடும்பத்தினருடன் சமுத்துவ பொங்கல் வைத்து வழிபட்டனா்.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம், கரியாலூா், தியாகதுருகம் உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஆளிநா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
முன்னதாக, காவலா்களின் பிள்ளைகள், காவலா்களுக்கான ஓட்டப்பத்தியம், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
நிகழ்வை காவல் ஆய்வாளா்கள் அறிவழகி, ஏழுமலை தொகுத்து வழங்கினா். கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஏழுமலை நன்றி கூறினாா்.