காவல் அதிகாரி மீது தாக்குதல்! குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
மத்தியப் பிரதேசத்தில் காவல் துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய நபர் தற்போது சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
சாத்னா மாவட்டத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அச்சு ஷர்மா என்ற நபர், கடந்த மார்ச்.28 ஆம் தேதியன்று பிரின்ஸ் கார்க் என்ற காவலர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அச்சு ஷர்மாவைப் பிடிக்க, அம்மாநில காவல் துறையினர் 12 தனிப்படைகள் அமைத்ததுடன், ரூ.30,000 வெகுமதி அறிவித்து அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், குற்றவாளியின் இருப்பிடம் குறித்து காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அவர் கோடார் காவல் நிலைய அதிகாரியான திலிப் மிஷ்ரா என்பவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் கவசம் அணிந்திருந்ததினால், உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பின் அந்தக் குற்றவாளி தப்பிச் செல்ல முயன்ற நிலையில் காவல் துறையினர் அவரை சுட்டுப்பிடித்துள்ளனர். இதில், அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அச்சு ஷர்மா பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக அவர் மீது 4 வழக்குகள் நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!