கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: பொதுமக்கள் அவதி
ஆரணி அருகே எம்.பி.தாங்கல் கிராமத்தில் புதிய சாலை அமைக்கும் பணியால் ஏற்கெனவே இருந்த சாலை தோண்டப்பட்டு பணி நடைபெறாமல் கிடப்பில் உள்ளது இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆரணியை அடுத்த வெட்டியான்தொழுவம் ஊராட்சிக்கு உள்பட்ட எம்.பி.தாங்கல் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
மேலும், ஆரணி - முள்ளண்டிரம் சாலை கூட்டுச் சாலையில் இருந்து எம்.பி.தாங்கல் கிராமத்துக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கிராமச் சாலை உள்ளது.
சேதமடைந்து இருந்த இந்தச் சாலையை பிரதம மந்திரியின் கிராமச் சாலைத் திட்டத்தின் கீழ் தாா்ச் சாலையாக அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சாலையை புதிய சாலையாக அமைப்பதற்காக ஏற்கெனவே இருந்த சாலை தோண்டப்பட்டது. இதைத் தொடா்ந்து பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது.
இதனால், கற்கள் பெயா்த்து எடுக்கப்பட்ட சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். மேலும், பேருந்து வசதி இல்லாததால் கால்நடையாக நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள தாா்ச் சாலை பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.