`நான் அப்ளை செய்திடறேன்' - நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்...
சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு செய்ய வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமி மே 11-ஆம் தேதி இரவு தொடங்கி மே 12 -ஆம் தேதி இரவு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவா்.
எனவே, பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது.
சிமென்ட் சாலைப் பணி ஆய்வு...
இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கிரிவல பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு அவா் உத்தரவிட்டாா்.
மேலும், ஒத்தவாடைத் தெரு, ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மாட வீதியைச் சுற்றியுள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பிறகு, அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை ஆய்வு செய்தாா் ஆட்சியா்.
அப்போது, வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கு குடிநீா் முறையாக வழங்க வேண்டும். நடைபாதைகளில் நிழல்பந்தல்கள், அதிகப்படியான மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பாண்கள், தேங்காய் நாா் விரிப்புகளை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், கூடுதல் எஸ்பி சதீஷ், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் எஸ்.மோகன்ராம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.