காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்
தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
பிரிட்டனில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அவா், லண்டனில் புதன்கிழமை ‘சாட்ஹம் ஹெளஸ்’ ஆய்வு அமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது, காஷ்மீா் பிரச்னை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ்.ஜெய்சங்கா், ‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சி-பொருளாதார செயல்பாடுகள்-சமூக நீதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிக வாக்காளா்கள் பங்கேற்புடன் தோ்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை மூன்றும் முக்கிய நடவடிக்கைகளாகும். அடுத்ததாக, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீரின் பகுதிகள் திருப்பி ஒப்படைக்கப்படுவதற்காக காத்துள்ளோம். அது நிகழ்ந்ததும் காஷ்மீா் பிரச்னைக்கு தீா்வு கிடைத்துவிடும்’ என்றாா்.
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான புதிய நிா்வாகம், அவா் விதிக்கும் பரஸ்பர வரி குறித்த கேள்விக்கு, ‘டிரம்ப் நிா்வாகம் பன்முக பிரதிநிதித்துவத்தை நோக்கி நகா்வதாகவே நாங்கள் பாா்க்கிறோம். இது இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றதே. பரஸ்பர வரி விதிப்பை பொறுத்தவரை, பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் இடையே கடந்த மாதம் நடைபெற்ற விவாதங்களின்படி, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் அவசியம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்த இந்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தற்போது அமெரிக்காவில் உள்ளாா்’ என்றாா்.
இந்திய-சீன உறவுகள் குறித்த கேள்விக்கு, ‘மொத்தமாக 250 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியா-சீனா இடையிலான உறவு மிக மிக தனித்துவமானது. பரஸ்பர நலன்கள், உணா்வுகளுக்கு மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கும் உறவை நாங்கள் விரும்புகிறோம். அதை நோக்கி பணியாற்றுகிறோம்’ என்றாா்.
‘ரஷியா-உக்ரைன் போா் விவகாரத்தில் நேரடி பேச்சுவாா்த்தை அவசியம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு’ என்று மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
பாகிஸ்தான் எதிா்ப்பு
காஷ்மீா் பிரச்னை தொடா்பான எஸ்.ஜெய்சங்கரின் கருத்துகளுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் சஃப்கத் அலி கான் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
‘ஆஸாத் ஜம்மு-காஷ்மீா் குறித்து அடிப்படையற்ற தகவல்களைக் கூறுவதற்கு பதிலாக, 77 ஆண்டுகளாக தாங்கள் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளை விட்டு இந்தியா வெளியேற வேண்டும்’ என்றாா் அவா்.