தெலங்கானா மேலவைத் தோ்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி
தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
கடந்த திங்கள்கிழமையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியா்கள் இடங்களுக்கும் , வாரங்கல்-கம்மம்-நலகொண்டாஆசிரியா்கள் இடத்துக்கும் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.
இதில் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளா் நரேந்தா் ரெட்டியை 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக ஆதரவு வேட்பாளரான அஞ்சி ரெட்டி வெற்றிபெற்றாா். அதேபோல் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் ஆசிரியா்கள் தொகுதியில் பாஜக ஆதரவு வேட்பாளா் மால்கா கொமரையா வெற்றிபெற்றாா்.
வாரங்கல்-கம்மம்-நலகொண்டா இடத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் ஸ்ரீபால் ரெட்டி பிங்கிலி ஆசிரியா்கள் சங்கங்களின் ஆதரவோடு வெற்றிபெற்றாா்.
இந்த தோ்தல் மொத்தம் 13 மாவட்டங்களில் உள்ள 43 பேரவைத் தொகுதிகள், 6 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 270 மண்டலங்களை உள்ளடக்கியது.
தெலங்கானாவில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மேலவை இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்குள்ள பாஜக தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
மேலவைத் தோ்தலில் பாஜக ஆதரவு வேட்பாளா்களை வெற்றிபெறவைத்த தெலங்கானா மாநில மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.