நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்
‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கருத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப் கூறும் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இருதரப்பு வா்த்தக உறவு தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளாா். இந்நிலையில், வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக அதிபா் டிரம்ப் தெரிவித்திருக்கிறாா்.
மோடி அரசு அமெரிக்காவிடம் எதை ஒப்புக்கொண்டுள்ளது? இந்திய விவசாயிகள் மற்றும் இந்திய உறுபத்தியாளா்களின் நலன்களை மத்திய அரசு சமரசம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதா?
நாடாளுமன்றம் வரும் 10-ஆம் தேதி மீண்டும் கூடுகிறபோது, இதுகுறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் ஊடக மற்றும் செய்தி வெளியீட்டுத் துறைத் தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘வரிக் குறைப்புக்கான அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து இந்திய விவசாயிகள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் நலன்களை மத்திய அரசு சமரசம் செய்தது ஏன்?.
அமெரிக்காவில் பிரதமா் மோடியை வைத்துக்கொண்டே, பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அதிபா் டிரம்ப் கூறும்போது, பிரதமா் ஒரு வாா்த்தைகூட பதில் பேசவில்லை. பிரதமரை வைத்துக்கொண்டே இந்தியாவை டிரம்ப் அவமதிப்பு செய்தாா். இந்தச் சூழலில், அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பைக் குறைத்தால், இந்திய பொருளாதாரமும், ஏற்கெனவே தோல்வியடைந்த மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமும் மேலும் பாதிப்பைச் சந்திக்கும்’ என்றாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கனடா, மெக்ஸிகோ, நேபாளம் போன்ற நாடுகள் பயப்படாத நிலையில், பிரதமா் மோடி பயப்படுவது ஏன்? இது இந்தியாவுக்கும், அதன் 150 கோடி மக்களுக்கும் அவமதிப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.