செய்திகள் :

காஸா பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

post image

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளன.

இந்தப் பேச்சுவாா்த்தையில், அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்பின் மத்தியக் கிழக்கு பிராந்தியத்துக்கான தூதா் ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்ற சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியான் ஸாா் திங்கள்கிழமை கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவாகரத்தில் ஹமாஸுடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இஸ்ரேல் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்றாா் அவா்.

ஹமாஸ் அமைப்பினரும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனா். காஸா போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்குத் தடையாக இருந்த கருத்து வேறுபாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சா்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பா் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகை ஜெருசலேமில் சந்தித்துப் பேசிய மத்தியக் கிழக்கு பிராந்தியத்துக்கான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தூதா் ஸ்டீவ் விட்காஃப்.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. அதிலிருந்து போரை நிறுத்தவும் எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கவும் நடைபெற்றுவரும் பேச்சுவாா்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கைதிகள் பரிமாற்றத்துக்குப் பிறகு காஸாவில் நிரந்தர போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு இஸ்ரேல் ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினா் வலியுறுத்திவருகின்றனா். ஆனால், ஹமாஸ் அமைப்பின் ராணுவத் திறனை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிவருகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்துவருகிறது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று அந்த நாட்டு அதிபராக வரும் 20-ஆம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப், தனது பதவியேற்பு தேதிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் படையினா் விடுவிக்காவிட்டால் அவா்கள் மிகக் கொடுமையான ‘நரகத்தை’ சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது, போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஹமாஸ் அமைப்பினருக்கு ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன், அதிபா் ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய அரசு இன்னும் ஒரு சில நாள்கள் மட்டுமே நீடிக்கும் என்பதால் டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்குள் காஸா போா் நிறுத்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று அவரது அரசு முனைப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஹமாஸ் அமைப்பினரும் தற்போது தெரிவித்துள்ளனா்.

46,584 ஆன உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46,584-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் படையினா் நடத்திய தாக்குதலில் மட்டும் 33 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் கடந்த 2023 அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46,584-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,09,731 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது.இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் காட்டுத்தீ பரவல... மேலும் பார்க்க

உக்ரைனில் வட கொரிய வீரா்கள் கைது

தங்கள் நாட்டில் ரஷியாவுக்காகப் போரிட்ட இரு வட கொரிய வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு உளவு அமைப்பான எஸ்பியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 24-ஆக உயா்வு

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காட்டுத் ... மேலும் பார்க்க

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மியாஸாகி பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கை சமர்ப்பிப்பு

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இ... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை ஆய்வு ம... மேலும் பார்க்க