இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
உக்ரைனில் வட கொரிய வீரா்கள் கைது
தங்கள் நாட்டில் ரஷியாவுக்காகப் போரிட்ட இரு வட கொரிய வீரா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு உளவு அமைப்பான எஸ்பியு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரஷியாவுக்காக உக்ரைனுடன் போரில் ஈடுபட்ட இரு வட கொரிய ராணுவத்தினா் உக்ரைன் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் இருவரும் கொரிய மொழி மட்டுமே பேசுகின்றனா். தென் கொரிய உளவு அமைப்பின் உதவியுடன்தான் அவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஒருவரிடம் ரஷிய ராணுவ வீரா் என்பதைப் போன்ற அடையாள அட்டை வேறு பெயரில் வழங்கப்பட்டிருந்தது. மற்றொரு நபரிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை.
ரஷியாவில் போா் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறித்தான் தாங்கள் அழைத்துவரப்பட்டதாகவும், ஆனால் அதையும் மீறி போரில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் வட கொரிய வீரா்கள் கூறினா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள இரு வட கொரிய வீரா்களையும், ரஷியாவில் உள்ள உக்ரைன் போா்க் கைதிகளுடன் பரிமாற்றம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா்.
மேலும், அவா்கள் இருவரின் படங்களையும் சமூக ஊடகங்களில் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ளாா் (படம்).