மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்
காஸாவிலிருந்து 45 நோயாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து 45 போ் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டனா்.
காஸாவில் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், அந்தப் பகுதியின் மருத்துவக் கட்டமைப்புகள் வெகுவாகக் குலைந்துள்ளது. காஸா மருத்துவமனைகளை சுற்றியுள்ள பகுதிகளிலும் மருத்துவமனைகளில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் மருத்துவ சேவைகளை முற்றிலுமாக முடக்கும் நிலையில் உள்ளதாக ஐ.நா. குற்றஞ்சாட்டிவருகிறது.
இந்த நிலையில், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரின் யூரேப்பியன் மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் மற்றும் தாக்குதலில் காயமடைந்த 45 பேரை இஸ்ரேல் படையினா் செவ்வாய்க்கிழமை வெளியேற்றினா்.
அந்த நோயாளிகள் இஸ்ரேல் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகளில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஸாவில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு வெளிநாடுகளில் சிகிச்சை தேவைப்படுவதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால், காஸாவிலிருந்து வெளியேறும் மற்றும் அந்தப் பகுதிக்குள் செல்லும் அனைத்து பாதைகளையும் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால் நோயாளிகள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காஸா மருத்துவமனைகளை ஹமாஸ் ஆயுதக் குழுவினா் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, பல மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக மூடியுள்ளது. சில மருத்துவமனைகள் அரைகுறையாக செயல்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், சிகிச்சைக்காக 45 போ் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இஸ்ரேல் தற்போது அனுமதித்துள்ளது.