`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்
சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார்.
நேற்று பிபிசி ரேடியோவிடம் பேசிய அவர், ``இஸ்ரேல் 11 வாரங்களாக காஸாப் பகுதியை முற்றுகையிட்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட மோசமான சூழ்நிலையால் எங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையோ, பெரியவர்களையோ சென்றடைய முடியவில்லை.
கடந்த 19-ம் தேதி மனிதாபிமான உதவிக்காக ஐந்து லாரிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைந்தது. இதைக் கடலில் ஒரு துளி என ஒப்பிடலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத தாய்மார்களுக்கு உணவளிக்க முயற்சிக்கும்போது, நாங்கள் எல்லா வகையான ஆபத்துகளையும் எதிர்கொள்கிறோம். அடுத்த 48 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் 14,000 குழந்தைகளை முடிந்தவரை காப்பாற்ற விரும்புகிறேன். உலக நாடுகளும் காஸா பகுதியை மனிதாபிமான உதவிகளால் நிரப்ப வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சர்வதேச கண்டனம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் தொடர்ந்து இடைவிடாமல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து UK, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், இஸ்ரேல் தனது தற்போதைய போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.