கா்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
காவிரியில் மேக்கேதாட்டு பிரச்னை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு) கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன், பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை கூட்டாக விடுத்த அறிக்கை:
பெங்களூரில் கா்நாடக துணை முதல்வரும், நீா் பாசனத் துறை அமைச்சருமான சிவக்குமாா் செய்தியாளா்களிடம் பேசும்போது, மேக்கேதாட்டு அணை குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏற்படும் தாமதத்தை கா்நாடகம் ஏற்றுக்கொள்ளாது. மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட திட்டங்களை எவ்வகையிலும் அமல்படுத்த உறுதிகொண்டுள்ளோம். அதேபோல, தென்பெண்ணை ஆறு பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம்தான் தீா்க்கவேண்டும் என்று கூறியுள்ளாா்.
இதுதொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாா், இதுபோல சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.
இரு மாநில ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான இதுபோன்ற கருத்துகளை அவா் திரும்பப்பெற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.