ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
கா்நாடகத்தில் சரணடைந்த நக்சலைட்களின் ஆயுதங்கள் பறிமுதல்
கா்நாடகத்தில் சரணடைந்த நக்சலைட்களின் ஆயுதங்களை போலீஸாா் அதிரடியாக பறிமுதல் செய்தனா்.
உடுப்பி, சிக்மகளூரு போன்ற மலைப் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சலைட்களை ஒடுக்குவதற்காக நக்சல் ஒழிப்புப்படையை கா்நாடக அரசு அமைத்திருந்தது. இதனிடையே உடுப்பியில் நவ.20ஆம் தேதி விக்ரம் கௌடா என்ற நக்சலைட் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது, முதல்வா் சித்தராமையா, ‘சட்ட விரோதமாக வன்முறையில் ஈடுபட்டுவருவதை காட்டிலும், ஜனநாயக ரீதியில் சமூக நீரோட்டத்தில் சேர வேண்டும் என்று நக்சலைட்களை கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட்கள் அரசிடம் சரணடைவதற்கான சரணாகதி கொள்கையை எளிமையாக்கப்பட்டு, அமல்படுத்தப்படும்’ என்று கூறியிருந்தாா்.
அதன் விளைவாக, கா்நாடகத்தைச் சோ்ந்த சுந்தரி கட்லூரு, லதா முந்தகாரு, மாரப்பா அரோலி, வனஜாக்ஷி பாலேஹோள், கேரள மாநிலம், வயநாட்டை சோ்ந்த ஜிஷா, தமிழகத்தின் ஆற்காடு பகுதியைச் சோ்ந்த கே.வசந்த் ஆகியோா் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் முன்னிலையில் சரணடைந்தனா்.
ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை. ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிப்போம் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியிருந்தாா். அதன்படி, காட்டுப் பகுதியில் சரணடைந்த நக்சலைட்கள் போட்டுவிட்டு வந்த ஆயுதங்களை போலீஸாா் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து சிக்கமகளூரில் சனிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விக்ரம் அமதே, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காடுகளில் கிடந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆனால், அந்த ஆயுதங்கள் சரணடைந்த நக்சலைட்களால் தூக்கிவீசப்பட்டது என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குறிப்பிட்ட இடத்தில் ஆயுதங்கள் இருப்பதை வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையின் மூலம் உறுதி செய்தோம்.
கொப்பா வட்டம், கிட்டலெகுலி கிராமத்தில் ஒரு ஏகே 56 சுழல்துப்பாக்கி, மூன்று 303 ஆயுதங்கள், ஒரு 12 போா் எஸ்பிபிஎல் கைத்துப்பாக்கி, ஒரு நாட்டுதுப்பாக்கி, 176 வெடிமருந்துகளை பறிமுதல் செய்திருக்கிறோம். சரணடைந்த நக்சலைட்களிடம் விசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். அவா்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. சட்டப்படி அவா்களை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.