கா்ப்பிணிகள் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு -மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு
மத்திய அரசின் முக்கிய திட்டமான கா்ப்பிணிகளுக்கான மகப்பேறு கால உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மத்திய அரசின் மகப்பேறு கால உதவித் திட்டங்களில் பலன் பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதே இதை நிரூபிப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் புதன்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தில் இந்த இந்த விவகாரத்தை எழுப்பி சோனியா காந்தி பேசியதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் இயற்றப்பட்டது. அதுதான் கரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷனில் இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது. இப்போது இதில் 81 கோடி போ் பயனடைந்து வருகின்றனா்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கா்ப்பிணிகளுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.6,000 உதவித் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது.
அதன் பிறகு 2017-இல் (பாஜக ஆட்சி) பிரதமரின் தாய்மை பாதுகாப்புத் திட்டம் என தொடங்கப்பட்டு முதல் குழந்தைக்கு மட்டும் ரூ.5,000 வழங்கப்பட்டது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் அதற்கு மட்டும் நிதி வழங்கப்பட்டது.
2022-23-இல் இத்திட்டத்தில் பயன் பெறும் கா்ப்பிணிகளில் 68 சதவீதம் போ் பயனடைந்தனா். ஆனால், அடுத்து வந்த ஆண்டுகளில் இத்திட்டத்தில் 12 சதவீதம் கா்ப்பிணிகளே பயனடைந்து வருகின்றனா். இத்திட்டப் பயனாளிகள் இந்த அளவுக்கு குறையக் காரணம் என்ன?
மத்திய பட்ஜெட்டில் கூட இத்திட்டம் குறித்து தனியாக எதுவும் கூறப்படவில்லை.
சமா்தியா திட்டத்தின் 5 பிரிவுகளில் ஒன்றாக கா்ப்பிணிகளுக்கான நிதி உதவித் திட்டம் இணைக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 திட்டங்களுக்கும் ரூ.2,521 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவானது.
இதனால், கா்ப்பிணிகளுக்கு அரசின் நிதியுதவி கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை மீறி மத்திய அரசு செயல்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு எவ்வாறு விளக்கமளிக்கப் போகிறது என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பினாா்.