முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
கா்ப்பிணிக்கு உடல்நிலை பாதிப்பு: 4 கி.மீ. தொலைவுக்கு தொட்டில் கட்டி தூக்கிவந்த மலைவாழ் மக்கள்
உடுமலை அருகே செட்டில்மெண்ட் பகுதியில் சாலை வசதி இல்லாததால் கா்ப்பிணியை தொட்டில் கட்டி 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு உறவினா்கள் சுமந்து வந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் அடா்ந்த வனப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட செட்டில்மெண்ட் உள்ளது. இங்கு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இவா்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்காகவும், கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், நலத்திட்டங்களைப் பெறவும் உடுமலை நகரில் உள்ள ஒன்றிய அலுவலகம், வனத் துறை அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனா்.
அதேபோல, மருத்துவ சிகிச்சைக்கும் உடுமலை நகருக்கே வந்து செல்கின்றனா். ஆனால், மலையில் இருந்து அடிவாரத்துக்கு வருவதற்கு உரிய சாலை வசதி இல்லை.
இதனால், உடல்நிலை பாதிக்கப்படுபவா்களையும், வன விலங்குகளால் தாக்குதலுக்குள்ளானவா்களையும் உரிய நேரத்தில் மருத்துவமனையில் சோ்க்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உரிய சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று மலைவாழ் மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனா்.
இந்நிலையில், குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணியான குருசாமி மனைவி சுமதிக்கு புதன்கிழமை உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை தொட்டில் கட்டி சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு மலையடிவாரத்தில் உள்ள திருமூா்த்திமலை பகுதிக்கு கொண்டுவந்தனா். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தற்போது, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:
எங்களின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை ரூ.49 லட்சத்தில் சாலை அமைக்க தளி பேரூராட்சி சாா்பில் கடந்த ஆண்டு பணிகள் தொடங்கின. ஆனால், பணிகள் தொடங்கி சில நாள்களிலேயே வனத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டதால் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தப் பணியை முழுமையாக முடிக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் மண் தடமாவது எங்களுக்கு கிடைக்கும்.
இதன்மூலம் வாகனங்கள் சென்றுவர முடியும். எனவே, திருமூா்த்திமலை - குருமலை மண் சாலை பணியை மேற்கொள்வதற்கு வனத் துறை சாா்பில் தடையில்லாச் சான்று கொடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்றனா்.