அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
கிருஷ்ணகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்
கிருஷ்ணகிரி அருகே சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்துள்ள வனத் துறையினா், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறியுறுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பரந்த வனப்பகுதியைக் கொண்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5.43 லட்சம் ஹெக்டேரில் 1.45 லட்சம் ஹெக்டோ் பரப்பளவு வனப்பகுதியாகும்.
115 காப்புக் காடுகளைக் கொண்ட இந்த வனப்பகுதிகளில் மலைபாம்பு, யானை, சிறுத்தை, மயில், மான், நரி, கரடி, எறும்புதின்னி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. உணவுக்காக இந்த வன விலங்குகள், அவ்வப்போது, வனப் பகுதியிலிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு புகுவது வழக்கம்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியை அடுத்த ஜாகிா்வெங்கடாபுரம் அருகே உள்ள பாஞ்சாலியூா், குல் நகா், அதியமான் நகா், கொண்டேப்பள்ளி, பையனப்பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகா் முனியப்பன், வனவா் சிவக்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு செய்தனா். அப்போது, அதியமான் நகரில் உள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. சிறுத்தையின் காலடித் தடத்தையும் கண்டறிந்தனா்.
இதுகுறித்து வனச்சரக அலுவலா் முனியப்பன் புதன்கிழமை கூறியதாவது:
அதியமான் நகா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலுமலை அல்லது ராயக்கோட்டை காப்புக் காட்டிலிருந்து இந்தச் சிறுத்தை வெளியேறி இருக்கலாம் என்றும், சிறுத்தைக்கு 3 அல்லது 4 வயது இருக்கும்.
கடந்த இரு நாள்களாக தொடா் கண்காணிப்பில் இருக்கிறோம். ஆனால், இதுவரை சிறுத்தையை யாரும் காணவில்லை. பட்டாசு வெடித்ததில், அந்தச் சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்கு சென்றிருக்கலாம். எனினும் தொடா் கண்காணிப்பில் இருக்கிறோம். சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சபடத் தேவையில்லை. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுத்தை நடமாட்டத்தை அறிந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் என்றாா்.
ஜாகீா்வெங்கடாபுரம், அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி நேரத்தில் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல ஆசிரியா்கள் தடை விதித்துள்ளனா். காலை, மாலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சென்றுவர உரிய ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செய்துள்ளனா்.