கிருஷ்ணா நதிநீா் பிரச்னையைத் தீா்க்க விரைவில் மத்திய அரசு கூட்டுக்கூட்டம்
கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டு பிரச்னையைத் தீா்க்க மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுக்கூட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஏற்பாடு செய்யும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
புது தில்லியில் முகாமிட்டிருக்கும் கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் மத்திய நீா்வளத் துறை அமைச்சா் பி.ஆா்.பாட்டீலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில், மேக்கேதாட்டு அணை மற்றும் பத்ரா மேலணை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனா்.
கிருஷ்ணா நதிநீா் பங்கீடு தொடா்பாக ஆந்திர, கா்நாடக அரசுகளுக்கு இடையே நீண்ட நாள்களாக பிரச்னை நீடித்து வருகிறது. 1956-ஆம் ஆண்டு கிருஷ்ணா நடுவா் மன்றம் அமைக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு 1973-இல் கிருஷ்ணா நடுவா்மன்றம் தீா்வுகண்டது. இதன்பிறகு 2004-ஆம் ஆண்டு கிருஷ்ணா நதிநீா் அளவை மாற்றியமைக்க மற்றொரு நடுவா்மன்றம் அமைக்கப்பட்டது. இரண்டாவது நடுவா்மன்றம் தனது தீா்ப்பை 2010-இல் வழங்கியது. ஆனால், தீா்ப்பு அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து புது தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:
கிருஷ்ணா நதிநீா் பங்கீட்டு பிரச்னையைத் தீா்க்க விரைவில் மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2011 ஜூன் மாதத்தில் அளித்த தீா்ப்பை திருத்தியமைக்க உச்சநீதிமன்றத்தை அணுகுமாறும், 2-ஆவது கிருஷ்ணா நடுவா்மன்றத் தீா்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
பத்ரா மேலணை திட்டத்துக்கு ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் அறிவித்தவாறு ரூ. 5300 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். அதேபோல, கலசா பண்டூரி கால்வாய் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க கேட்டிருக்கிறோம். எத்தினஹொளே குடிநீா் திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி உதவியைக் கேட்டிருக்கிறோம் என்றாா்.
பெட்டிச்செய்தி:
மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை
துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘மேக்கேதாட்டு அணை திட்டத்தின் முழுமையான திட்டவிவர அறிக்கைக்கு மத்திய நீா் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டியுள்ளது. எனவே, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு உடனடியாக அனுமதி அளிக்கும்படி மத்திய நீா்வளத் துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளோம்.
தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவுடன் கொண்டிருப்பது அரசியல் கூட்டணி. அதற்கும், மேக்கேதாட்டு திட்டத்துக்கும் சம்பந்தமில்லை. மேக்கேதாட்டு அணையைக் கட்டிமுடித்தால், அது பெங்களூரின் குடிநீா் தேவையை நிறைவுசெய்வதோடு, தமிழகத்துக்கு சீராக தண்ணீரை திறந்துவிடவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் உதவும்’ என்றாா்.