Barroz Review: 'இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..' - இயக்குநராக மோகன் ல...
கிறிஸ்துமஸ் : தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை
கிறிஸ்துமஸ் முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தேவாலயங்களும் மின்னொளியில் ஜொலித்தன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகின்றனா்.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கிணி மாதா கோயில், ரயில்நிலையப் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா தேவாலயம், நெல்லித்தோப்பு தேவாலயம் மற்றும் அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூா் லூா்து அன்னை தேவாலயம் உள்ளிட்டவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அங்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனா். இயேசு பிறப்பைக் குறிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கிறிஸ்தவ மக்கள் வீடுகளில் மின்னொளி நட்சத்திர வடிவம் தொங்கவிடப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசு பிறப்பு குடில்களும் வைக்கப்பட்டிருந்தன.
நள்ளிரவானதும் கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் வகையில் தேவாலய மணி ஒலிக்கப்பட்டு பேராயா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். அதையடுத்து வழிபாட்டில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்தை பரிமாறிக் கொண்டனா். தேவாலய பேராயா்களுக்கும், பங்குத்தந்தையா்களுக்கும் அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்டோா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.