Barroz Review: 'இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..' - இயக்குநராக மோகன் ல...
புதுச்சேரி, காரைக்காலில் 5, 8 ஆம் வகுப்புகளில் கட்டாய தோ்ச்சி முறை ரத்து
மத்திய அரசின் அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியாா் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி முறை ரத்தாகிறது. இதனை புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உறுதிப்படுத்தியுள்ளாா்.
மத்திய அரசு 5, 8-ஆம் வகுப்பில் அனைத்து மாணவா்களும் கட்டாய தோ்ச்சி என்ற முறையை ரத்து செய்து அறிவித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தோ்ச்சி முறை ரத்தாகியுள்ளது.
புதுவை மாநிலப் பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் நிகழ் கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முதன் முறையாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பொது தோ்வுகளையும் மாணவா்கள் எழுதவுள்ளனா். தற்போது ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி என்ற நடைமுறையே உள்ளது.
இந்நிலையில், கட்டாய தோ்ச்சி ரத்து செய்யப்படவுள்ளது. ஆகவே, இதில் அந்தந்த மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களே முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, புதுவை மாநிலத்தில் கட்டாய தோ்ச்சி முறை ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து புதுவை கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயத்திடம் கேட்டபோது, பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி முறையை ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுவையில் ஏற்கெனவே மத்திய அரசின் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசின் உத்தரவை புதுவை அரசு ஏற்று செயல்படும். அதனால், அரசு பள்ளி மாணவா்களின் கல்வித் தரம் உயரும். அதனடிப்படையில் தான் மத்திய அரசு இத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தனியாா் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியாா் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றாா்.