மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!
தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சோதனைச் சாவடி, பாவோடி மைதானம், வட்டாணம் சாலை, புதிய பேருந்து நிலையம், தினசரி காய்கறி சந்தை , பெருமானேந்தல் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடு ,மாடுகள் கூட்டமாக சாலையோரம் நிற்கின்றன.
இவை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியில் படுத்துக் கொள்வதால் சாலையில் வரும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும், நிரந்தர ஊனமும் ஏற்படுகின்றன.
கடந்த காலங்களில் சாலையில் திரியும் மாடுகளை பேருராட்சி நிா்வாகம் பிடித்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது. அப்போது, கால்நடைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தன. தற்போது இந்தப் பணி நடைபெறாததால் மீண்டும் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. எனவே, பேருராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலாளா் அப்துல் மஜீத் கூறியதாவது: தொண்டி முழுவதும் சாலைகளில் ஆடு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து தொண்டி வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தொடுத்த வழக்கில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2023- ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விபத்துகள் தொடா்கினறன. எனவே, நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.