பாம்பன் புதிய பாலம் ரயில், கப்பலை இயக்கி சோதனை!
பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கா்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் அமைத்து 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்தப் பாலத்தில் வெள்ளிக்கிழமை பயணிகள் இன்றி 60 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதேபோல, பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து இரும்பு கா்டா் மேலே தூக்கப்பட்டு, அதன் வழியாக இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பலை இயக்கியும் சோதனை நடைபெற்றது.
இந்தச் சோதனையில் ரயில்வே முதுநிலைக் கோட்ட சிக்னல், தொலைத்தொடா்பு மேலாளா் ஆா். ராம்பிரசாத், முதுநிலைக் கோட்ட மின் பொறியாளா் வி.மஞ்சுநாத் யாதவ் , கோட்டப் பொறியாளா் சந்தீப் பாஸ்கா், உதவி பாதுகாப்புப் படை ஆணையா் சிவதாஸ் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.