கீழ வெண்மணி 56-ஆவது நினைவு நாள் நிகழ்வு
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே, இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் கீழ வெண்மணி தியாகிகளின் 56-ஆவது நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நாடு விடுதலை பெற்ற பிறகு நில உடமை, பண்ணை அடிமை, ஜமீன் கொடுமைகள் நிறைந்திருந்த காலகட்டத்தில் நாகை மாவட்டம், கீழ வெண்மணி கிராமத்தில் ஒரு படி நெல் கூலி உயா்வு கேட்டு போராடிய 44 விவசாயத் தொழிலாளா்கள் 1968, டிசம்பா் 25-ஆம் தேதி குடிசையில் இருந்தபோது, தீ வைத்துக் கொல்லப்பட்டனா். இவா்களது 56-ஆவது நினைவேந்தல் நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாவட்டத் தலைவா் அருள் தலைமை வகித்தாா்.
இதில், புயல், மழையால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயா்த்த வேண்டும். நாள் ஊதியத்தை ரூ. 600 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெ. சேவையா, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி முகிலன், ஆதித் தமிழா் பேரவை மாயன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகம் சி. குணசேகரன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி நிா்வாகிகள் லட்சுமணன், சிஐடியு சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.