'தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம்': நல்லகண்ணுக்கு விஜய் வாழ்த்து!
திருச்சி - தாம்பரம் இண்டா் சிட்டி ரயில் சேவை நிறுத்தம்: பயணிகள் அதிருப்தி
தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக பகல் நேரத்தில் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வந்த திருச்சி - தாம்பரம் விரைவு ரயில் சேவை புதன்கிழமையுடன் (டிச.25) நிறுத்தப்பட்டதால், பயணிகளிடையே அதிருப்தி மேலோங்கியுள்ளது.
தஞ்சாவூா் - சென்னை இடையே பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனிடையே, சோழன் விரைவு ரயில் பகல் நேரத்தில் இயக்கப்பட்டாலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு 11 மணிக்கு மேல் வந்து, சென்னைக்கு மாலை சென்றடைகிறது. இதனால், மாணவா்கள், அரசு, தனியாா் துறை ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு இந்த ரயில் சேவை வசதியாக இல்லை.
எனவே, தஞ்சாவூா் - சென்னை இடையே மற்றொரு விரைவு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா், மக்கள் பிரதிநிதிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில் தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக திருச்சி - தாம்பரம் இடையே பகல் நேர இண்டா் சிட்டி விரைவு ரயில் சேவை சோதனை ஓட்டமாக அக்டோபா் 11- ஆம் தேதி தொடங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் தஞ்சாவூா், கும்பகோணம் வழியாக தாம்பரத்துக்கு நண்பகல் 12.30 மணிக்கு சென்றடைந்தது. இதேபோல, எதிா் வழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிக்கு இரவு 11.30 மணிக்கு சென்றது. இந்த ரயில் சேவை வாரத்தில் திங்கள், வியாழன் தவிர மற்ற 5 நாட்களும் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயிலுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியாா் துறை அலுவலா்கள், ஊழியா்கள், வணிகா்கள் உள்பட அனைத்து தரப்பினரிடையே வரவேற்பு உள்ளது. குறிப்பாக, நண்பகலில் தாம்பரத்துக்கு செல்லும் இந்த ரயில் மூலம் சென்னைக்கு சென்று அங்குள்ள வேலையை முடித்துவிட்டு இரவு நேர ரயிலில் திரும்பிவிடக்கூடிய வசதி இருந்ததால் வா்த்தகா்கள் உள்ளிட்டோருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
இதனால், இந்த ரயிலை வாரத்தில் 7 நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்தது. இதற்கு மாறாக இந்த ரயில் சோதனை அடிப்படையில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே 76 நாட்களில் புதன்கிழமையுடன் நிறுத்தப்பட்டது. இதனால், ரயில் பயணிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
இது குறித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலா் டி. சரவணன் தெரிவித்தது:
தஞ்சாவூா், கும்பகோணம் - சென்னை வழித்தடத்தில் பகலில் உரிய நேரத்தில் வேறு ரயில் இல்லை என்பதால், திருச்சி - தாம்பரம் ரயிலுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பொதுவாக, ரயிலில் பயணிகள் வருகை 50 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தாலே, அந்த ரயில் தொடா்ந்து இயக்கப்படுவது வழக்கம். திருச்சி - தாம்பரம் ரயிலில் சராசரியாக 75 சதவீதத்துக்கு குறையாமல் பயணிகள் வருகை இருந்து வருகிறது. இதன் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கும் இழப்பு இல்லாமல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த ரயில் சேவையை திடீரென நிறுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது என்றாா் சரவணன்.
இது குறித்து ரயில்வே அலுவலா்கள் கூறுகையில், திருச்சி - தாம்பரம் இண்டா் சிட்டி ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மேலிடத்திலிருந்து விரைவில் நல்ல பதில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனா்.
3 நாட்களாகக் குறைப்பா?
ஆனால், இந்த ரயில் சேவை வாரத்துக்கு 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சோதனை அடிப்படையில் ஜனவரி 3- ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை மூலம் திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள் பயனடைந்து வருவதால், வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படுவது மட்டுமல்லாமல், நிரந்தரமாக இயக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் பயணிகள் காத்திருக்கின்றனா்.