நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
கீழடி அறிக்கை நிராகரிப்பா? அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் ஏன்? மக்களவையில் விளக்கம்
மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்தும் தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றம் குறித்தும் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கலாசாரத்துறை அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், “அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு மதிப்பாய்வு செய்ததா? அப்படியென்றால், அறிக்கை நிராகரிப்புக்கு காரணம் என்ன? அகழ்வாராய்ச்சி முடிவதற்குள் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன்? கீழடி அகழ்வாராய்ச்சியின் முழு அறிக்கை வெளியிடுவதற்கு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நிபுணர் குழுமை அமைக்க மத்திய அரசு உறுதி அளிக்குமா?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
“தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ள குறிப்பிட்ட காலங்கள் எடுக்கலாம். அந்த காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தலைமை தாங்கியிருக்கலாம். அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் தொல்லியல் துறை நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. அதன்பின்னர், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்.
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மதிப்பாய்வில் உள்ளது. நிபுணர்களின் கருத்துகள் ஆராய்ச்சியாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அறிக்கை குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
அறிக்கையை நிராகரிக்கவில்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறை மற்றும் கல்வி நிறுவனங்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சியை நடத்தி வருகின்றது.
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், நிர்வாகக் காரணங்களால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கீழடி அகழ்வாராய்ச்சியின் துல்லியமான கண்டுபிடிப்புகள் சட்டப்படி, உரிய அறிவியல் செயல்முறையைப் பின்பற்றி வெளியிடப்படும் என்று தொல்லியல் துறை உறுதி அளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.