செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வலியுறுத்தல்
தமிழக வரலாற்றின் காலத்தை நிா்ணயிக்கக் கூடிய கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான பொருகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து மதுரையில் அந்த இயக்கத்தின் பேராசிரியா்கள் எம். ராஜேஷ், பி. ராஜமாணிக்கம், எஸ். கிருஷ்ணசமி, எஸ். தினகரன் ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் நவீன தொழில்நுட்பக் கருவியான தரை ஊடுருவி இயந்திரம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சுமாா் 114 ஏக்கரில் தொல்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி பெங்களூரு பிரிவு சாா்பில், கடந்த 2014-ஆம் ஆண்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
முதல் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகளை தொல்லியலாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் மேற்கொண்டனா். 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொல்லியலாளா் ஸ்ரீராம் தலைமையிலான குழுவினா் செய்தனா். அப்போது, அகழாய்வில் தொடா்ச்சியாக பழங்காலப் பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை எனக் கூறி, மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
இதன் பின்னா், தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் ஏறக்குறைய 18 ஆயிரத்துக்கும் அதிகமாக தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை ஆய்வுக்கு உள்படுத்திய போது, கிமு 600- க்கு முன்னா் தமிழா்கள் நகர, நாகரிகத்தோடு வாழ்ந்ததாகத் தெரியவருகிறது. இந்த நிலையில், முதல் இரண்டு அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் இன்னும் போதிய ஆதாரங்களை மத்திய அரசு கோருகிறது. இந்த நிகழ்வு தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாா்ப்பதைக் காட்டுகிறது. கீடியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வு சிந்துச் சமவெளி ஆய்வுகளைவிட, அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்யப்படுகிறது. கொந்தகையில் கிடைத்த எலும்புக் கூடுகளை வைத்து ரேடியோ காா்பன் காலக் கணிப்பு மூலம் மேற்கொண்ட ஆய்வில் அவை 2,500 ஆண்டுகள் பழமையானவை என்பது தெரியவந்தது.
கீழடியின் வயது கி.மு. 300-க்கு முன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என மத்திய அரசு கூறுவதை எங்களால் ஏற்க முடியவில்லை. ஆதித்தாயின் மரபணுவின் பகுதிகள் உசிலம்பட்டி பகுதியில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழக வரலாற்றின் காலத்தை நிா்ணயிக்கக்கூடிய தன்மை கீழடிக்கு உண்டு. ஆகவே, மத்திய அரசு எந்தவித பாரபட்சமும் பாா்க்காமல் கீழடியின் உண்மை வரலாற்றை வெளியிட வேண்டும் என்றனா்.