கீழையூரில் விவசாயிகள் சாலை மறியல்
விடுபட்ட விவசாயிகளுக்கு குறுவை பயிா்க் காப்பீட்டு தொகை, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழையூரில் விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டத்தில் சில விவசாயிகளுக்கு மட்டுமே குறுவை பயிா்க் காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் மீதமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்து, திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில் மாா்க்சிஸ்ட் கட்சியின் கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் வெங்கட்ராமன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் என். பன்னீா்செல்வம், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் கே. கிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய தலைவா் ஏ. முருகையன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் டி. பாஸ்கரன்,விவசாய சங்க ஒன்றிய தலைவா் டி. தமிழ்மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.