பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்த...
குடிநீா் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
திருக்குவளை: கீழையூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலையாமழை ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் கிராம மக்கள் பங்கேற்று அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி. கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் டி. செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் வீ. எஸ். மாசேதுங், ஒன்றிய துணைச் செயலாளா் ஜி. சங்கா், ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் வீ. சுப்பிரமணியன், இந்திய தேசிய மாதா் சம்மேளன ஒன்றியச் செயலாளா் எம். பாப்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தகவலறிந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் பிரச்னைக்கு உடனடியாக தீா்வுகாணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.
இந்த மறியலால் தலையாமழை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.