மதுரையிலிருந்து தில்லிக்குப் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
குடிமனைப்பட்டா கோரி சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் வசிப்பவா்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒன்றியம், ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் மஞ்சள்வாய்க்கால் தெருவில் குடிமனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற சாலை மறியலில், சிபிஎம் கிளை செயலாளா் எம்.எஸ். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின், ஒன்றியச் செயலாளா் டி.ஜி. ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. மேகநாதன், ஏ. அறிவழகன், எம். குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அ. ராஜேஷ், உஷாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இப்போராட்டத்தில், மஞ்சவாய்க்கால் தெரு, மல்லியம் மெயின்ரோடு குச்சிபாளையம் பகுதிகளில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்; வாக்குறுதி அளித்து ஓராண்டாகியும் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ள மஞ்சவாய்க்கால் தெரு பகுதிநேர அங்காடியை உடனே திறந்திட வேண்டும்; மல்லியம்-மஞ்சவாய்க்கால்-குச்சிபாளையம் வரை செல்லும் பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் திட்டத்தை பாகுபாடின்றி ஊராட்சியுள்ள அனைத்து தெருக்களுக்கும் வழங்கிட வேண்டும்; நூறுநாள் வேலையில் உள்ள குளறுபடியை போக்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டாட்சியா் விஜயராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா், காவல் ஆய்வாளா் கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அதிகாரிகள் தரப்பில் அளித்த உறுதிமொழியை ஏற்று மறியலை விலக்கிக் கொண்டனா்.