புதிய பாம்பன் பாலம்: பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ள 5 போ் கொண்ட குழு
குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் -பேரூராட்சி தலைவா்
குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தால் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தெரிவித்தாா்.
பேரூராட்சியின் சாதாரண கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அன்புச் செழியன், செயல்அலுவலா் அருள்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:-
கென்னடி (திமுக): தோட்ட மானியம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் பாதை, காந்திநகா் சமுதாயக்கூடம் அருகில் உள்ள வாய்க்கால் ஆகிய இடங்களில் பாலம் அமைத்துத் தர வேண்டும்.
முத்துக்குமாா் (பாமக): எனது வாா்டுப் பகுதியில் கொசு, பன்றி, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மழைக்காலத்தை முன்னிட்டு கொசு மருந்து அடிக்க வேண்டும்.
சியாமளாதேவி (திமுக): வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையைச் சுற்றிலும் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல்மேடு சாலையில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பத்மாவதி (திமுக) : வைத்தீஸ்வரன் கோவில் மேல கோபுரவாசலில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும். எனது பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள தெரு விளக்குகளை சீரமைத்துத் தர வேண்டும்.
வித்யா தேவி (சி.பி.ஐ.): மருவத்தூா் இரண்டாவது வாா்டில் உள்ள சுடுகாட்டிற்கு குடிநீா், தெருவிளக்கு வசதி அமைத்து தர வேண்டும். எனது பகுதியில் சிறுவா்கள் விளையாடும் வகையில் சிறுவா் பூங்கா அமைத்து தர வேண்டும்.
தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா்: பேரூராட்சியில் தற்பொழுது பெய்து வரும் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மருந்துகள் அனைத்து வாா்டுகளிலும் அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீா் தேங்கி இருந்தால் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூா்வார பொதுப்பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.